2027ஆம் கல்வியாண்டில் அரச பாடசாலைகளின் தரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2025 ஜூலை 04 ஆம் திகதி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தரம் ஒன்று மாணவர் சேர்க்கை நடைமுறைகள், தகுதிகள் மற்றும் விண்ணப்பச் செயல்முறைகள் குறித்து விளக்கமளிக்கும் 25/2025 இலக்க வழிகாட்டிச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுநிருபம் தற்போது கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பான சுற்றுநிருபங்கள் வெளியிடப்படுகின்றன. இதன் முக்கிய நோக்கங்கள்:
கல்விக்கான சமமான அணுகலை உறுதிப்படுத்துதல்
வெளிப்படைத்தன்மையுடன் செயல்படத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்
முறைகேடுகளைக் குறைத்தல்
இந்த புதிய சுற்றுநிருபம், இலங்கையின் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலுடன், பிரதமர் - கல்வி அமைச்சர் என்ற முறையில் சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைய இந்த புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
2027ஆம் கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை தரம் ஒன்றில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள், சுற்றுநிருபம் மற்றும் தொடர்புடைய தகவல்களைப் பெற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை (www.moe.gov.lk) பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சேர்க்கை நடைமுறைகள், தகுதிகள் மற்றும் விண்ணப்பச் செயல்முறைகள் குறித்த முழு விவரங்களும் இந்தச் சுற்றுநிருபத்தில் இடம்பெற்றுள்ளன.

