“என் ரசிகர்களை நிச்சயம் பெருமைப்பட வைப்பேன்” என்று நடிகர் அஜித்குமார் பேசிய வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. துபாயில் நடைபெற்று வரும் ‘24 ஹெச் சீரிஸ்’ மத்திய கிழக்கு டிராபி கார் பந்தயத்தில் தனது சொந்த ரேஸிங் அணியுடன் பங்கேற்று வரும் அஜித், போட்டியின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பந்தயத்தின் போது அஜித் குமார் ரேஸிங் அணியைச் சேர்ந்த கார், திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட், தீப்பற்றியதை உணர்ந்த உடனே சமயோசிதமாக காரை நிறுத்தி வெளியே குதித்தார். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பாகவும் பயிற்சி மற்றும் தகுதிச் சுற்றுகளின் போது அஜித் அணியின் கார்கள் சில விபத்துகளை சந்தித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் பிரச்சனைகள் காரணமாக பந்தயத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், போட்டியை நேரில் காண துபாயில் திரண்டிருந்த ரசிகர்களை நினைத்து அஜித் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
“எனக்கு ஆதரவு அளிக்க இவ்வளவு தூரம் வந்து காத்திருந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதையோ அல்லது எங்கள் அணி பரிசு வெல்வதையோ பார்க்க முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு நான் உறுதியாகச் சொல்கிறேன், நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி ஒருநாள் நிச்சயம் உங்களை எல்லோரையும் பெருமைப்படுத்தும்” என்று அஜித் தெரிவித்துள்ளார்.
நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் அஜித் குமாரின் இந்த பேட்டி, அவரது ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தையும் ஆதரவையும் உருவாக்கியுள்ளது.

