புதிய கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமனம் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் 3 ஆம் திகதி எடுக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், அதே நாளில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாகவும் குறிப்பிட்டார். புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி நான்கு தடவைகள் முன்மொழிந்த பெயர்கள் இதற்கு முன்னர் அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது ஜனாதிபதி புதிய ஒருவரின் பெயரை மீண்டும் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டபிள்யூ.பி.சீ. விக்ரமரத்ன 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெற்றதிலிருந்து இதுவரை புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை. மேலும், பதில் கணக்காய்வாளர் நாயகமாக செயல்பட்டு வந்த அதிகாரியின் பதவிக்காலமும் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இத்தகைய பின்னணியிலேயே, அரசியலமைப்பு பேரவை பெப்ரவரி 3 ஆம் திகதி கூடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

