கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரபல பாதாள உலக துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 'கெஹெல்பத்தர பத்மே' எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் துப்பாக்கிதாரியாக செயல்பட்டதாகக் கூறப்படும் 'மாட்டியா' எனும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்னவே இவர்.
இவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். நேற்றிரவு (25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதான இந்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர். மேலும், இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீதான பிரதான குற்றச்சாட்டுகள் மிகவும் கொடூரமானவை. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, 'பஸ்பொட்டா' எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை, மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகியவையே அந்தக் குற்றச்சாட்டுகளாகும்.
இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த துணிச்சலான தாக்குதல், நாட்டின் சட்ட ஒழுங்கு முறைக்கு ஒரு சவாலாகவே கருதப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபராக இருந்த 'மாட்டியா', நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

