குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் அளித்துள்ளார்.
சுரேஷ் சலேவுக்காக எந்தவொரு விசேட அறையும் ஒதுக்கப்படவில்லை என்றும், அவர் அங்குள்ள சாதாரண அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த தடுப்பு அறைகள் புதிதாக அமைக்கப்பட்டவை அல்ல என்றும், இதற்கு முன்பும் பலர் இங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சுரேஷ் சலேவுக்கு உணவு வழங்கப்படாதது பிரச்சினை அல்ல என்றும், அவர் தனது வாயால் உணவு உட்கொள்ள மறுப்பதே முக்கிய பிரச்சினை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அவருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தேசிய வைத்தியசாலை மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், மூக்கின் வழியாக செலுத்தப்படும் குழாய் மூலம் உணவு நேரடியாக வயிற்றுக்கு வழங்கப்படுவதாகவும் கூறினார்.
தற்போது அவர் சுயநினைவுடன் நடமாடுவதுடன், தனது உடைகளை அவரே அணிந்து கொள்வதாகவும், அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டங்களை விடுத்து, அவரை உணவு உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவதே தீர்வாக இருக்கும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

