இலங்கையில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினரை, மனிதாபிமான அடிப்படையில் தாயகம் அனுப்பியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த கடற்படையினர், விசேட விமானம் ஒன்றின் மூலம் ஈரானுக்குப் புறப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச நெறிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், IRIS Dena என்ற ஈரானிய கடற்படைக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேரும் அடங்குகின்றனர். இந்த கப்பல், இலங்கைக் கடற்பரப்பிற்கு வெளியே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
மேலும், IRIS Bushehr கப்பலைச் சேர்ந்த 208 கடற்படையினரும் இந்த தாயகம் அனுப்பும் நடவடிக்கையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 240 பேரும் துருக்கிக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் பாதுகாப்பாக ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

