இந்தியாவின் கர்நாடக மாநிலம், KGF (கோலார் தங்கப் படிவுகள்) பகுதியில் உள்ள புனித மேரி உயர்நிலைப் பாடசாலையில் பயிலும் மாணவி குசுமா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேர்ந்த ஒரு கோரமான விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் அவரது கால், தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது கல்வி ஆண்டை இழக்க விரும்பாமல் மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபடியே பாடங்களைக் கற்றார்.
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் பாடக்குறிப்புகளைப் பெற்றுத் தயாரான குசுமா, கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தனது கல்வி இலட்சியத்தைக் கைவிடாமல், நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
தேர்வு மையத்தில் ஸ்ட்ரெச்சரில் (நகரும் படுக்கை) படுத்துக்கொண்டே 10ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதிய அவர், தற்போது வெளியாகியுள்ள முடிவுகளில் First Class-இல் தேர்ச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
மொத்தம் 625 மதிப்பெண்களுக்கு 374 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள குசுமா, தற்போது பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் உபாதைகளைத் தாண்டி அவர் பெற்றுள்ள இந்த வெற்றி, பலருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

