ஜப்பானில் இன்று குறிப்பிடத்தக்க நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, ஜப்பானின் வடக்கு பகுதியான இவாத்தேவுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK வெளியிட்ட காணொளியில், ஹச்சினோஹே நகரில் போக்குவரத்து விளக்குகள் வழக்கம் போல் இயங்கியதும், போக்குவரத்து இயல்பாக இருந்ததும் காண்பிக்கப்பட்டது. உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், நிலநடுக்கத்தின் பாதிப்பால் தோஹோகு ஷின்கான்சென் அதிவேக ரெயில் சேவைகள் உள்ளிட்ட சில ரெயில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஜப்பான் ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான ஜப்பானில் நிலநடுக்கங்கள் சாதாரணமாக நிகழும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவுகோலில் 6 அல்லது அதற்கும் அதிகமான அளவில் உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு ஜப்பானில் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க புள்ளிவிவரமாகும்.

