பங்களாதேஷில் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்கவுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பங்களாதேஷில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக, இந்திய பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தமாக அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக BNP-யின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்திருந்தார். இருப்பினும், அதே நாளில் பிரான்ஸ் ஜனாதிபதி எம்யூயல் மெக்ரான் இந்தியா வரவிருப்பதால், பிரதமர் மோடி விழாவில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

