காஸாவில் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளின் அதிர்வுகள் சிறுவர்களின் குரல்வளையை நசுக்கி வருகின்றன. சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் உளவியல் ரீதியான ஆதரவு தேவைப்படும் நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குண்டுவீச்சுகளின் அதிர்ச்சி மற்றும் தலையில் ஏற்படும் காயங்கள் காரணமாகப் பல சிறுவர்கள் பேசும் திறனை இழந்து 'மௌனமான அவதி' (Silent Suffering) எனப்படும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
ஐந்து வயது ஜாத் சொஹுத், தனது வீட்டின் அருகே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்புக்குத் திகைத்துப்போய் ஒலிகளை எழுப்பும் திறனை முழுமையாக இழந்துள்ளார். இதேபோல், வான்வழித் தாக்குதலால் சிதைந்த படிக்கட்டுகளில் இருந்து விழுந்த நான்கு வயது லூசின் தம்போரா, நரம்பியல் பாதிப்பால் பேசும் திறனை இழந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் குழந்தைகள் பேச முடியாமல், அசையாமல், வெற்றுப் பார்வையுடன் இருக்கும் நிலையை, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பைச் சேர்ந்த உளவியல் நிபுணர் காத்ரின் கிளாட்ஸ் புருபாக், "அறிவாற்றல் போர் காயங்கள்" (Cognitive War Injuries) என்று அழைக்கிறார்.
தொடர்ச்சியான வன்முறையை எதிர்கொள்ளும் சிறுவர்களின் மூளை, 'தற்காப்பு நிலைக்கு' (Survival Mode) சென்றுவிடுவதால், அவர்கள் வெளியுலகத்துடன் பேசுவதைத் தவிர்த்து, உறைந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
காஸா நகரிலுள்ள ஹமட் வைத்தியசாலையின் பேச்சு சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் மூசா அல்-கோர்டி, 'தேர்வு சார் ஊமைத்தன்மை' (Selective Mutism) மற்றும் அதிர்ச்சியால் ஏற்படும் குரலிழப்பு வழக்குகள் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார்.
மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களுக்கு மத்தியிலும், 'நம்பிக்கைக் குமிழிகள்' (Hope Bubbles) போன்ற எளிய விளையாட்டு முறைகள் மூலம் இந்தச் சிறுவர்களை மீண்டும் பேச வைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

