டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவு குறித்து முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக உரையாற்றிய அவர், இந்தியாவை அமெரிக்கா எப்போதும் ஆதரிக்கும் என்று கூறினார்.
அப்போது அவர், நரேந்திர மோடி குறித்து பாராட்டுக்களையும் தெரிவித்தார். “மோடி ஒரு சிறந்த தலைவர். அவர் எனது நண்பர். நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்,” என்று டிரம்ப் கூறினார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “இந்தியா என்னையும் எங்கள் நாட்டையும் 100 சதவீதம் நம்பலாம். எப்போதாவது உதவி தேவைப்பட்டால் எங்களை தொடர்புகொள்ளலாம்,” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ். ஜெய்சங்கர், மார்கோ ரூபியோ மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்கியோ கோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
டிரம்பின் இந்த கருத்துகள், இந்தியா-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

