மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 1980-களின் தென் தமிழக முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாசாரத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ஈசா, மாளவிகா மனோஜ், அருள்குமார், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் படக்குழுவினர் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இதில் கலந்துகொண்ட நடிகை மாளவிகா மனோஜ், ‘ஹபீபி’ திரைப்படம் குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “ஹபீபி நான் தமிழில் நடித்த முதல் படம். பல்வேறு சவால்களையும், தாமதங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இறுதியில் படம் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் நாம் சந்திக்கும் கஷ்டமும் உழைப்பும் ஒருபோதும் வீணாகாது என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது” என்றார்.
மேலும், “தமிழ் ரசிகர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். அவர்கள் அளிக்கும் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு உற்சாகமாக இருக்கிறது. அந்த அன்புக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களிலும் நல்ல கதைகளையும், தரமான படங்களையும் தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் நம்பிக்கையையும் அன்பையும் காப்பாற்ற முயற்சிப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றி, மாளவிகா மனோஜின் தமிழ் திரையுலக பயணத்திற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது.

