நடிகை நாடியா மாயமானதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் சவூதி அரேபியாவில் மாரடைப்பால் காலமானதாக அவரது மகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த திடீர் செய்தி மலேசிய திரையுலகிலும் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியத் திரையுலகில் ‘Syaitan Munafik’, ‘Kudeta’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற 49 வயதான நடிகை நாடியா கெசுமா, உம்ரா யாத்திரைக்காக சவூதி அரேபியா சென்றிருந்தார். கடந்த புதன்கிழமை ஜித்தா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்னர், அவர் தொடர்பில் இல்லாமல் போனதாக தகவல் வெளியானது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கடும் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில், நடிகை நாடியாவின் மகள் சமூக வலைதளம் மூலம் வெளியிட்ட பதிவில், தனது தாய் மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். விமான நிலையத்தில் வந்த அதே நாளில் நடிகை நாடியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவல் குடும்பத்தினருக்கு தாமதமாகவே தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.
நடிகை நாடியாவின் மறைவுக்கு மலேசிய மற்றும் தெற்காசிய திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உம்ரா பயணத்தின் போது நிகழ்ந்த இந்த திடீர் இழப்பு, திரையுலகை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

