ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று டொனால்ட் டிரம்ப் தனது பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈரானின் கடற்பகுதி முற்றுகை போன்ற விவகாரங்கள் காரணமாக இறுதி ஒப்பந்தம் எட்டப்படுவதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.
முன்னதாக டிரம்ப், ஈரானுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். குறிப்பாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தொடர்பாக பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய கருத்தில், “ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இரு தரப்பும் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு சரியான முடிவை எட்ட வேண்டும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை ஈரான் தரப்பும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து எஸ்மாயில் பகாயி கூறுகையில், “ஒப்பந்தம் எட்டுவதற்கு இரு தரப்பும் மிகவும் அருகிலும், அதே நேரத்தில் இன்னும் தூரத்திலும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைகள் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

