அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார். தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுத் தேர்தலுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
தற்போதைய மேயரான Karen Bass 34.7 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், Nithya Raman 27.1 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆரம்ப கட்ட எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர், பின்னர் எண்ணப்பட்ட தபால் வாக்குகளின் ஆதரவால் தனது நிலையை மேம்படுத்தியுள்ளார்.
கேரளாவில் பிறந்த நித்யா ராமனின் குடும்ப வேர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. சிறுவயதிலேயே குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர், உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர். Harvard University-யில் பட்டப்படிப்பையும், Massachusetts Institute of Technology-யில் முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார்.
கலிபோர்னியா தேர்தல் விதிகளின்படி, முதல் கட்டத் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத பட்சத்தில், அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். அந்த அடிப்படையில் கரேன் பாஸ் மற்றும் நித்யா ராமன் ஆகியோர் இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.
வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுத் தேர்தல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர அரசியலில் முக்கிய கவனம் பெறும் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய மற்றும் தமிழ் வம்சாவளி சமூகங்களிடையேயும் இந்தத் தேர்தல் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

