உலகின் முக்கியமான எரிபொருள் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருக்கும் ரஷியாவில் தற்போது எதிர்பாராத வகையில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உள்நாட்டு தேவையை சமாளிக்க அண்டை நாடுகளிடமிருந்தும், இந்தியாவிடமிருந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்தின் தாக்குதல்களால் ரஷியாவின் சில முக்கிய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பெட்ரோல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக ரஷியாவின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் பெட்ரோல் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோடை காலங்களில் ரஷியாவில் எரிபொருள் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும். தினசரி சுமார் 1.10 லட்சம் டன் பெட்ரோல் தேவைப்படும் நிலையில், உற்பத்தி பாதிப்பு அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க பெலாரஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளிடமிருந்து பெட்ரோல் இறக்குமதியை அதிகரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், இந்தியாவிடமிருந்தும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷியாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷிய எண்ணெயின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிடமிருந்து பெட்ரோல் வாங்கும் சாத்தியம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இதுகுறித்து ரஷிய எரிசக்தி அமைச்சகம் அல்லது இந்திய பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ரஷியாவின் உள்நாட்டு எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நீண்டகால போரின் பொருளாதார தாக்கங்களை வெளிப்படுத்துவதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
