அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஈரான் ராணுவ நடவடிக்கை அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபையில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் 50-48 என்ற கணக்கில் டிரம்பிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட் சபையிலேயே இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்த நிலையில், தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் இந்த சூழலில், டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஜனநாயகக் கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. அமெரிக்க சட்டப்படி, அதிபர் ஒரு போரை பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் 60 நாட்கள் மட்டுமே நடத்த முடியும் என்பதும், அதன்பிறகு ஒப்புதல் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து குடியரசுக் கட்சி உறுப்பினர்களான ரேண்ட் பால், சூசன் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி, பில் காசிடி ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜான் பெட்டர்மேன் எதிராக வாக்களித்தார். மேலும், குடியரசுக் கட்சியின் மிட்ச் மெக்கானல் மற்றும் டேவ் மெக்கார்மிக் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால், இந்த தீர்மானத்தை தடுக்கத் தேவையான முழுப் பெரும்பான்மையை குடியரசுக் கட்சியால் பெற முடியாமல் போனது.
ஈரானுக்கு எதிரான போரை நிறுத்த ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையில் மேற்கொண்ட இது 10-வது முயற்சியாகும். மேலும், இந்த தீர்மானம் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிரம்பிற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறுகையில், "ஈரான் இப்போது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. பல தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்காவையும் அதன் அதிபரான என்னையும் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறார்கள்.
இத்தகைய சூழலில், செனட் சபை மிகவும் பொருத்தமற்ற நேரத்தில், அர்த்தமற்ற 'போர் அதிகாரச் சட்ட' வாக்கெடுப்பை நடத்தியுள்ளது. இதன் மூலம் அவர்கள் எதிரிக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்துள்ளனர். 4 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்து என் பணியை மேலும் கடினமாக்கியுள்ளனர். ஆனாலும் நான் எப்படியாவது அதைச் செய்து முடிப்பேன். ஏனென்றால் நான் எப்போதும் காரியத்தை முடித்துக் காட்டுபவன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பு முடிவானது, டிரம்பின் ராணுவ அதிகாரத்திற்கு எதிரான ஒரு பெரிய அரசியல் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனையடுத்து, அமெரிக்கா-ஈரான் இடையிலான இறுதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் டிரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

