மியான்மரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இராணுவ ஆட்சி மாற்றத்தை எதிர்த்து பணியை விட்டு விலகிய முன்னாள் அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என மியான்மர் இராணுவ ஆட்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1, 2026) அறிவித்துள்ளது. மேலும், பணியில் இல்லாத காரணத்தால் அரசு அமைப்புகளால் ‘பிளாக் லிஸ்ட்’ செய்யப்பட்ட ஊழியர்களின் பெயர்கள் நீக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2021 பிப்ரவரி 1 அன்று, மியான்மர் இராணுவம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றி அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை விட்டு விலகினர். இதில் மருத்துவர்கள், அரசு நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அடங்குவர். இந்த நடவடிக்கை, இராணுவ ஆட்சிக்கு எதிரான Civil Disobedience Movement (CDM) எனப்படும் பெரும் எதிர்ப்பு இயக்கமாக உருவெடுத்தது.
பணியை விட்டு விலகியவர்களில் சிலர் தனியார் துறைகளில் வேலை தேடினர். மற்றவர்கள் ஜனநாயக ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்களுடன் இணைந்து, தற்போது வரை நீடிக்கும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர். இந்த மோதல்களில் இரு தரப்பிலும் சேர்த்து பத்தாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த வாரம் மியான்மர் இராணுவ ஆட்சி, ஒரு மாத காலம் நீடித்த தேர்தலை நிறைவு செய்துள்ளது. இது ‘மக்கள் ஆட்சி மீண்டும் அமையக்கூடிய ஒரு கட்டமாக’ விளம்பரப்படுத்தப்பட்டாலும், ஜனநாயக கண்காணிப்பு அமைப்புகள் இந்த தேர்தல் முழுமையாக இராணுவ ஆதரவாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளன. தேர்தலில், இராணுவ ஆதரவு கொண்ட முக்கிய கட்சி எதிர்ப்பின்றி பெரும் வெற்றியை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இராணுவ ஆட்சியின் National Defence and Security Council வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 பிப்ரவரிக்கு பிறகு அனுமதியின்றி பணியிடங்களை விட்டு சென்ற அரசு ஊழியர்கள், தங்களது பழைய துறைகளின் அலுவலகங்களை தொடர்பு கொண்டு மீண்டும் பணிக்கு வர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு குற்றச்சாட்டு எதுவும் இல்லாதவர்களும், தண்டனை அனுபவித்து முடித்தவர்களும், இன்னும் பிளாக் லிஸ்டில் பெயர் உள்ளவர்களாக இருந்தால், அவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பிளாக் லிஸ்ட் காரணமாக பலர் இதுவரை தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த தகவல் அரசின் ஊடகமான Global New Light of Myanmar நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கூ நடந்த பின்னர், இராணுவ ஆட்சி போராட்டக்காரர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை மேற்கொண்டது. தகவலாளர்களின் உதவியுடன் திடீர் சோதனைகள் நடத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது. தற்போது, 22,000-க்கும் மேற்பட்டோர் இராணுவ ஆட்சியின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக Assistance Association for Political Prisoners தெரிவித்துள்ளது.
இதனிடையே, கூ மூலம் அகற்றப்பட்ட ஜனநாயக தலைவரான ஆங் சான் சூ கி இன்னும் இராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது பெரும் மக்கள் ஆதரவு பெற்ற கட்சியும் கலைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த தேர்தல், மியான்மரின் ஐந்தில் ஒரு பகுதி நகரங்களில் கூட நடத்தப்படவில்லை. அங்கு தொடர்ந்து நடைபெறும் மோதல்களால், நாட்டின் பெரிய பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ளன.
மேலும், 2020 தேர்தலில் 90% இடங்களை வென்ற கட்சிகள் — அதில் சூ கியின் கட்சியும் அடங்கும் — இந்த முறை வாக்குச் சீட்டில் இடம்பெறவில்லை என Asian Network for Free Elections தெரிவித்துள்ளது.
