அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதலின் ஒரு பகுதியாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியது.
இந்த பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது, "ஈரானை முழுமையாகத் தோற்கடித்த பிறகு, ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிக்க உள்ளேன்" என்று கூறினார். இந்த முற்றுகை ஊடுருவ முடியாதது என்றும், இது உலக நாடுகளுக்குச் செய்யப்படும் ஒரு சிறந்த சேவை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஈரானின் வெளியுறவுத்துறை துணை மந்திரி காசெம் கரிபாபாதி, "ஹார்முஸ் நீரிணையை ஒரு ட்வீட் மூலமோ, விமானம் தாங்கி கப்பல் மூலமோ அல்லது தேர்தல் பேச்சு மூலமோ கைப்பற்றிவிட முடியாது. ஈரான் அச்சுறுத்தல்களுக்கோ அல்லது ராணுவ பலத்தை வெளிப்படுத்துவதற்கோ பயப்படாது" என்று கூறினார். அத்துடன், ஹார்முஸ் நீரிணை எப்போதும் ஈரானியது என்றும், அது ஈரானின் கட்டளைப்படி மட்டுமே மூடப்படும் மற்றும் திறக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்க ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்ப் இதனை 'விளையாட்டாக' (jokingly) தான் கூறினார் என்றும், இது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கொள்கையல்ல என்றும் வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது. ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி, டிரம்ப் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பிரதேசமாக அறிவிப்பது குறித்து தீவிரமாக இல்லை என்று கூறினார்.
முன்னதாக, 2025-ம் ஆண்டு தனது இரண்டாவது பதவியேற்பு உரையில் அமெரிக்காவை ஒரு வளரும் நாடாகச் சித்தரித்த டிரம்ப், கனடா மற்றும் கிரீன்லாந்து போன்ற இடங்களை அமெரிக்காவுடன் இணைக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரங்கள் அனைத்தும் அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
