அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர, ஈரான் அமெரிக்காவை மதிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்கு அச்சுறுத்தல்களை விட தூதரக ரீதியான அணுகுமுறையும் பரஸ்பர மரியாதையும் முக்கியம் என்று கூறினார்.
அவர் பேசுகையில், “ஈரான் எங்களை மதிக்கும் வரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் ‘பயம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை. அது சரியான வார்த்தை அல்ல. ஆனால் அவர்கள் அமெரிக்காவை மதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முழுமையான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், தற்போது முக்கிய கவனம் பெற்றுள்ள ஹார்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை முழுமையாக திறக்கப்படும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருப்பதால், அதன் வழித்தடம் சீராக இயங்குவது சர்வதேச எண்ணெய் விலையை நிலைநிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

