ஹம்பாந்தோட்டை மாவட்டம் வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற தனிப்பட்ட தகராறில், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞரணி உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொல்லப்பட்ட இளைஞர் ஹங்குருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளராகவும், ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி இளைஞரணியின் ஊடக செயலாளராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று (27) இரவு இடம்பெற்ற மதுபான விருந்தொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மெதமுலன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
