இலங்கையில் டெங்கு நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இவ்வருடத்தில் இதுவரை மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தற்போது அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த டெங்கு நோயாளர்களில் 52.96% அதாவது 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இது நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக உருவெடுத்துள்ளது.
மாகாண வாரியான பாதிப்பு விவரங்கள்
மேல் மாகாணம் - 48,725 (52.96%)
தென் மாகாணம் - 13,533
மத்திய மாகாணம் - 8,274
சப்ரகமுவ மாகாணம் - 7,558
மாவட்ட வாரியான பாதிப்பு விவரங்கள் (முதல் ஐந்து):
கம்பஹா - 19,631
கொழும்பு - 18,245
கண்டி - 6,613
மாத்தறை - 6,036
களுத்துறை - 5,951
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் 3,700 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மற்ற மாவட்டங்களில், காலியில் 5,039 பேரும், இரத்தினபுரியில் 4,935 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாத வாரியான பாதிப்பைப் பொறுத்தவரை, இவ்வருடத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதம் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 29,968 ஆகும். அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 21,533 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 6,671 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்துத் தங்கள் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வார இறுதி நாட்களில் வீடுகளைச் சுற்றியுள்ள தேங்கும் நீரை அகற்றுவதன் மூலம் இந்த அபாயத்தை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
