ராகம–கந்தானை வீதியில் வல்பொல ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.வல்பொல ரயில் நிலையம் நோக்கி பயணித்த கழிவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறி, ரயில் கடவையின் பாதுகாப்பு தடுப்புகள் மூடப்பட்டிருந்த நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த லொறி, ரயில் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மற்றுமொரு லொறியுடன் மோதியுள்ளது.
இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன், மகள் ஆகிய இரு பிள்ளைகள் வீதியின் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், 8 வயதுடைய சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் தொடர்புடைய மற்றுமொரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
