Japan-இன் Osaka நகரிலுள்ள ஒரு ராமேன் உணவகம், சீனச் சுற்றுப்பயணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த உணவகம், சீன நாட்டவர்களுக்கு தடை விதிப்பதாகவும், ஆங்கிலத்தில் உள்ள உணவுப் பட்டியலில் விலைகளை இரட்டிப்பாகக் காட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இம்மாதம் 4ஆம் தேதி, சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், சீனச் சுற்றுப்பயணிகள் தங்களது உணவகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்த உணவகம் அறிவித்தது. தொந்தரவு தரும் வாடிக்கையாளர்களில் 90 விழுக்காட்டினர் சீன நாட்டவர்கள் என்பதே இந்தத் தடைக்கு காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.
இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சுமார் 33 மில்லியன் இணையவாசிகள் அதை பார்த்ததாகவும், 1,800-க்கும் மேற்பட்டோர் கருத்துகளைப் பதிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. “ஒரு சிலரின் செயல்பாடுகளை காரணமாகக் கொண்டு, அனைத்துச் சீன நாட்டினருக்கும் தடை விதிப்பது நியாயமா?” என்று பலர் கேள்வி எழுப்பினர்.
மேலும், உணவகம் ஜப்பானிய மொழி உணவுப் பட்டியலுக்கும் ஆங்கில உணவுப் பட்டியலுக்கும் வெவ்வேறு விலைகளை நிர்ணயித்திருப்பதே பிரச்சினைக்குக் காரணம் என சிலர் சுட்டிக்காட்டினர். Kanji எழுத்துமுறை சீன எழுத்துக்களிலிருந்து உருவானதால், சீன நாட்டவர்கள் விலை வித்தியாசத்தை எளிதில் கவனித்து கேள்வி எழுப்பியிருக்கலாம் என்றும், அதையே தொந்தரவாக உணவகம் கருதியது சரியா என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்த உணவக உரிமையாளர், ஜப்பானிய மொழி புரியாத வாடிக்கையாளர்களுக்காகவே இரண்டு விதமான உணவுப் பட்டியல்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். ஆனால், மொழியைக் காரணமாகக் கொண்டு இரட்டிப்பு விலை விதிப்பது தவறானதும் பாகுபாடானதுமாகும் என்று பல இணையவாசிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

