ஒரு பிரபல நிறுவனத்தின் மனிதவள (HR) அதிகாரி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் பரபரப்பான விவாதத்தை உருவாக்கியுள்ளது. அந்த பதிவில், “காலை 10.00 மணிக்கு சம்பளம் கிரெடிட் ஆனது; 10.05 மணிக்கு ராஜினாமா மெயில் வந்தது” என்பதே முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டிருந்தது. புதிதாக வேலைக்கு சேர்ந்த ஊழியருக்கு பயிற்சி அளித்து, அவரது பணிகளை நேரடியாக கவனித்துவந்த HR அதிகாரியே இந்த பதிவை எழுதியிருந்தார்.
அந்த பதிவில் தொழில் தர்மம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், நிறுவனம் நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய நிலையில், சம்பளம் வந்த ஐந்து நிமிடங்களில் வேலையை விட்டு விலகுவது நியாயமானதா, இது தொழில்முறை நெறிமுறையா என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இவ்வாறு கடைசி நேரத்தில் ராஜினாமா செய்வது பொறுப்புணர்வும் மெச்சூரிட்டியும் இல்லாத செயல் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற சூழ்நிலைகளில் வெளிப்படையாக பேசி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதைப் பற்றி பேசலாம், விளக்கம் அல்லது உதவி கேட்டிருக்கலாம் என்றும், அவசரமான தனிப்பட்ட முடிவுகளை விட உணர்வுபூர்வமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். எந்த வேலையும் சவால்கள் இன்றி இருக்காது என தெரிவித்த அவர், உண்மையான தொழில்முறை நபர்களுக்கு சம்பளத்தை விட வளர்ச்சியே முக்கியம் என சுட்டிக்காட்டினார். அனைத்து வேலைகளும் அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் தொடர்ச்சியான முயற்சியைத் தேவைப்படுத்தும் என்றும், வளர்ச்சி முதல் சம்பளத்துடன் வராது; அது விடாமுயற்சியால் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
முடிவில், வேலை தொடர்பான முடிவுகளை தெளிவுடன் எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், நிறுவன கலாச்சாரம் அல்லது வேலையையே குற்றம் சொல்லும் முன் சிந்தித்து, பேசிக் கொண்டு தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் கலவையான கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. சிலர், ராஜினாமா செய்த ஊழியரிடம் எந்த தவறும் இல்லை என்றும், HR அதிகாரி இதுபோன்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொழில்முறைக்கு ஏற்றதல்ல என்றும் விமர்சித்துள்ளனர்.
மற்றொரு தரப்பினர், சம்பளம் வந்தவுடன் ஒருவர் ராஜினாமா செய்கிறார் என்றால், அந்த மாதத்திற்கான பணியை அவர் முறையாக செய்துள்ளார் என்பதையே அது காட்டுகிறது என்றும், நோட்டிஸ் காலத்தில் பணியாற்றுவது இயல்பான நடைமுறை என்பதால் நிறுவனத்திற்கு இது அதிர்ச்சியளிக்கும் விஷயம் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்கள் முழுமையான நம்பிக்கையை எதிர்பார்க்கும் நிலையில், ஆஃபர் லெட்டரை விட “கல்யாண சான்றிதழ்” கொடுக்க வேண்டும் என சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

