நேபாளத்தின் ராசுவா மாவட்டம், திமுரே பகுதியில் கடந்த புதன்கிழமை பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாறைகள், பனிக்கட்டிகள், சேறு கலந்த வெள்ளத்தில் வீடுகள், சாலைகள், பாலங்கள் என பல விஷயங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேரிடரில் மண் மற்றும் இடிபாடுகளுக்கு நடுவே 6 வயது சிறுமி சிக்கிக் கொண்டார்.
கடந்த மூன்று நாட்களாக இடிபாடுகளுக்கு அடியில் இருந்த அந்த சிறுமியின் அழுகுரலை நேபாள ஆயுதப்படை போலீசார் கேட்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, இடிபாடுகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு, சிறுமி பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டார். இந்த உருக்கமான மீட்புக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி, காண்போரின் கண்களை குளமாக்கியுள்ளது.
முதலில் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முயற்சிக்கப்பட்டது. ஆனால், இருள் மற்றும் மோசமான வானிலை காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர், சிறுமி விமானம் மூலம் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெள்ளத்தில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 540-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர். மீட்புப் பணிகளுக்கு இந்தியா மற்றும் சீனாவின் சிறப்புக் குழுக்கள் உதவி வருகின்றன. இந்தப் பேரிடர் மறுகட்டமைப்புச் செலவு 4 முதல் 5 பில்லியன் டாலர்கள் (ரூ.50 ஆயிரம் கோடி) வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
