ஈரானுடனான போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகவும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு ஈரான் தீவிர ஆர்வம் காட்டுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் படைகள் உலகக் கச்சா எண்ணெய் வணிகத்தின் முக்கிய நரம்பு வழியான ஹார்முஸ் நீரிணையை மூடின.
பல நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், ஈரானின் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பதாலும், நீரிணை மூடப்பட்டிருப்பதாலும் முழுமையான அமைதி திரும்பவில்லை. பாகிஸ்தான் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், "ஈரானின் ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டிரோன் மற்றும் இராணுவத் தொழிற்சாலைகளில் 82 சதவீதம் செயலிழந்துள்ளன. ஈரான் போரைத் தொடரும் திறனை இழந்துவிட்டது.
"கச்சா எண்ணெய் மூலம் ஈரானுக்கு இப்போது எந்த வருமானமும் இல்லை. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதாலும், எங்கள் கடற்படை முற்றுகையாலும், ஒரு பீப்பாய் எண்ணெய் கூட வெளியேறவில்லை, "ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. அவர்களின் நாணயம் மதிப்பிழந்து, பணவீக்கம் வெடித்துச் சிதறுகிறது. மக்கள் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப் போராடுகிறார்கள்." என்றும் டிரம்ப் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஈரான் “இது முற்றிலும் பொய்யான பரப்புரை. எங்களுக்கு எந்தப் பொருளாதார நெருக்கடியும் இல்லை. நாங்கள் அமெரிக்காவை விட அதிக பொருளாதார வலிமை கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளது.
