தமிழ் சினிமாவின் ‘கிங் ஆஃப் ஓப்பனிங்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார், தற்போது தனது கார் ரேஸிங் பணிகளிலும், ‘ஏகே 64’ படத்திற்கான முன்னேற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நீண்ட நாட்களாக அவரது பட அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரும் விருந்தாக மீண்டும் திரைக்கு வர இருக்கிறது மங்காத்தா.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம், ஜனவரி 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளபோதும், முன்பதிவிலேயே சுமார் ரூ.60 லட்சத்துக்கும் மேல் வசூலித்து, ரீ-ரிலீஸ் படங்களின் சாதனைகளை உடைத்து வருகிறது. விநாயக் மகாதேவன் கதாபாத்திரத்தின் ‘ஆட்டம்’ மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே, ‘ஏகே 64’ படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். அதற்கு முன்னதாக படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டர்களில் அஜித்தின் என்ட்ரிக்கு மீண்டும் விசில், கோஷம் என கொண்டாட்டம் வெடிக்க ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.
ரீ-ரிலீஸிலேயே ரூ.60 லட்சம் முன்பதிவு வசூல் என்றால், படம் வெளியாகும் நாளில் பாக்ஸ் ஆபிஸில் எத்தனை கோடிகள் குவியப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

