உஸ்பெகிஸ்தான் நாட்டில் மருத்துவக் கல்வி பயின்று வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, சக இந்திய மாணவரால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த பசந்த்-மினி தம்பதியின் மகள் சாகர்யா (21). இவர் உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். (MBBS) முதலாமாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியின் விடுதியில், கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவனும் தங்கிப் படித்து வந்துள்ளார்.
கடந்த ஜூலை 3-ம் தேதியன்று, விடுதி அறையில் வைத்து மாணவி சாகர்யாவை, சாதருள் அனாம் மடிக்கணினியால் (Laptop) தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சாகர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி கேட்டு உஸ்பெகிஸ்தான் விரைந்த சாகர்யாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மாணவி சாகர்யாவை மதம் மாறுமாறு சாதருள் அனாம் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து மடிக்கணினியால் அடித்துக் கொன்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கொலையாளி சாதருள் அனாமை உஸ்பெகிஸ்தான் நாட்டுப் போலீஸார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெளிநாட்டில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சாகர்யாவின் உடல், கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் மூலம் கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்டது. பெற்றோரின் சந்தேகத்தை அடுத்து, ஆலப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், நேற்று முன்தினம் மாலை அவரது சொந்த ஊரான ஹரிப்பாட்டில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் சாகர்யாவின் உடல் கண்ணீருடன் தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சாகர்யாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கேரளாவின் ஹரிப்பாடு போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
