அவுஸ்திரேலியாவின் அவுட்பேக் பகுதியில் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், அவர் பயன்படுத்திய குழிக் கழிப்பறை திடீரென இடிந்து விழுந்ததால், இடுப்பளவு ஆழமான கழிவுப் பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கான்பெராவைச் சேர்ந்த இந்தப் பெண், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டார்வினில் உள்ள உறவினர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகருக்கு தென்மேற்கே சுமார் 145 கிமீ தொலைவில் உள்ள ஹென்பரி விண்கல் பாதுகாப்பு மண்டலத்தில் (Henbury Meteorite Conservation Area) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வழியாகச் சென்ற ஒரு உள்ளூர் தொழிலாளியின் கவனத்தைப் பெண்ணின் கணவர் ஈர்த்துள்ளார்.
அந்தத் தொழிலாளி ஒரு கயிற்றைப் பள்ளத்திற்குள் இறக்கி, தனது காரின் உதவியுடன் சுமார் 45 நிமிடங்கள் போராடி அந்தப் பெண்ணை வெளியே இழுத்துள்ளார். அந்தப் பெண் சுமார் மூன்று மணி நேரம் மனிதக் கழிவுகள், சிறுநீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள் நிறைந்த பள்ளத்தில் சிக்கியிருந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வடக்குப் பிரதேசத்தின் பணியிட சுகாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வாறான விபத்துக்கள் அவுஸ்திரேலியாவில் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன.
2024 ஜூலை மாதம், விக்டோரியா மாநிலத்தின் இண்டிகோ பள்ளத்தாக்கில் (Indigo Valley) கழிப்பறை ஒன்றில் சிக்கிய நபரைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 2012 ஆம் ஆண்டு, குயின்ஸ்லாந்தில் 65 வயது மூதாட்டி ஒருவர் இவ்வாறான குழிக் கழிப்பறைக்குள் விழுந்ததில் அவரது கால் முறிந்தது.
மேலும், தென்னாப்பிரிக்காவில் 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பாடசாலை மாணவர்கள் இருவர் இவ்வாறான கழிப்பறைகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சோகமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அரசு, பாடசாலைகளில் உள்ள இத்தகைய கழிப்பறைகளை முற்றாக அகற்ற உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

