மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் கானோ மாகாணத்தில் உள்ள குவானர் பார்டே நகரைச் சேர்ந்த நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் கடுமையாக காயமடைந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
போலீசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், லாரி அதிக வேகத்தில் சென்றபோது சாரதி கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கான முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் மோசமான சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து விதிகள் சரியாக அமல்படுத்தப்படாதது போன்ற காரணங்களால் சாலை விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

