துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையைத் தன்வசப்படுத்தியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது.
தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 39 பந்துகளில் 68 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ஓட்டங்களையும் விளாசி பலமான அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 17 ஓட்டங்களையும், கமலினி 15 ஓட்டங்களையும், அணித்தலைவி ஹர்மன்பிரீத் கௌர் 14 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை தரப்பில் மிதாலி அயோத்யா, சமாரி அத்தப்பத்து மற்றும் சௌமுடி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.
இலங்கை அணியில் அணித்தலைவி சமாரி அத்தப்பத்து 36 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்னே 20 ஓட்டங்களையும் பெற்றனர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி 4 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
முன்னதாக இந்திய மகளிர் அணி 2004, 2005-06, 2006, 2008, 2012, 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
