அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடாவின் 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு கடந்த 22-ந்தேதி 50 சதவீத வரி விதித்தார். இதனை எதிர்த்து கனடா பிரதமர் மார்க் கர்னியின் அரசு, 15% முதல் 50% வரை அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதித்தது.
இந்த வர்த்தக மோதல் அதிகரித்து வரும் நிலையில், கனடா இளைஞர்கள் தங்களின் தேசப்பற்றை நிரூபிக்கும் வகையில் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். கனடா முழுவதும் உள்ள சூப்பர்மார்க்கெட்களில் அமெரிக்க ஒயின், மளிகை, உணவு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவதை தவிர்த்து, கனடா தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
மான்ட்ரியல் சூப்பர்மார்க்கெட் மேலாளர் பீட்டர் கியானோபோலிஸ் கூறுகையில், "பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். கனடா தயாரிப்புகளுக்கு அவர்கள் விருப்பம் காட்டுகின்றனர்" என்றார்.
மேலும், அமெரிக்காவுக்கான சுற்றுலாவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க எல்லைப் பகுதிகளில் சுற்றுலா மையங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கியும், கனடா மக்கள் அமெரிக்கப் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.
