பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் இன்று திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் பக்தியா, பக்திகா மற்றும் கனுர் (கோஸ்ட்) மாகாணங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயிரிழப்புகள் குறித்து பாகிஸ்தான் அரசு, "உயிரிழந்த 29 பேரும் பயங்கரவாதிகளே" என்று அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பகுதிகளில் மோதல்களும், பயங்கரவாதத் தாக்குதல்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதல்களுக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்தச் சூழலில், கராச்சியில் நடந்த சமீபத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் தாக்குதல் நடத்திய ஆறு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 'தெஹ்ரி இ தலிபான்' (TTP) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்தே ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நேரடியாக வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
