ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பெயினில் ஜூன் மாதத்தில் மட்டும் 1,028 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வெப்பத்தால் ஆயிரக்கணக்கானோர் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் மற்றும் தொழில்துறை மாசு உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சர்வதேச பருவநிலை மாநாடுகளில் பல நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தாலும், நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025 ஜூன் மாதத்தில் வெப்ப அலை காரணமாக 407 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 2026 ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,028 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரட்டிப்புக்கும் அதிகமான உயர்வாகும்.
மேலும், 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்ப அலை உயிரிழப்பாக இதுவே கருதப்படுகிறது.
ஸ்பெயினுடன் சேர்த்து ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு, சுலோவாகியா மற்றும் அங்கேரி ஆகிய நாடுகளிலும் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்திலும் ஜூன் மாதத்தில் அசாதாரண வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், பிரான்சில் சராசரியை விட அதிகமான பகல் வெப்பநிலையுடன், வரலாறு காணாத அளவுக்கு இரவு நேர வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்த்து, போதுமான அளவு தண்ணீர் அருந்தி, அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
