தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டிற்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் என மொத்தம் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முதல்-அமைச்சர் விஜய் முகாமை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இன்று மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க பெற்றோர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
