Australia-வில் 16 வயதுக்குக் கீழ் உள்ளோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கணக்குகள் அனைத்தும் 16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்குச் சொந்தமானவை எனவும் அவர்கள் கூறினர்.
10 சமூக ஊடகத் தளங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்த நிறுவனம் எத்தனை கணக்குகளை நீக்கியது என்ற விவரங்களை அரசு வெளியிடவில்லை.
இணையம் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தடை கடந்த மாதம் நடைமுறைக்கு வந்தது. ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையை முன்மாதிரியாக கொண்டு, பிற நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான புள்ளிவிவரங்கள் ஊக்கமளிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் சுமார் இரண்டரை மில்லியன் பேர் 8 முதல் 15 வயதுக்குள் உள்ளவர்கள். இவர்களில் 84 விழுக்காட்டினரிடம் சமூக ஊடகக் கணக்குகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், Meta நிறுவனத்தின் கீழ் இயங்கும் Facebook, Instagram மற்றும் Threads ஆகிய தளங்களில் மட்டும், தடை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே 5.5 லட்சம் கணக்குகள் அகற்றப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
