திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, இப்போது சின்னத்திரைக்கு வருகிறார். சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனத்தின் புதிய தமிழ் தொலைக்காட்சி சேனலான 'சோனி விழா' வில் ஒளிபரப்பாகும் 'மாஸ்டர் செப்' சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி விழா சேனல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, சமந்தா தொகுப்பாளராக பங்கேற்கும் இந்த சமையல் நிகழ்ச்சிக்கான டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஆயுத பூஜை அன்று ஒளிபரப்பாக உள்ளது.
சின்னத்திரையில் தற்போது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பிரபலங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் சமந்தாவும் இணைந்துள்ளார். இது குறித்து சமந்தா கூறுகையில், "நான் இதுவரை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. அதனால்தான் இந்த வாய்ப்பிற்கு சம்மதித்தேன். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளையும், ஒருவரை ஒருவர் ஆச்சரியப்படுத்துவதையும் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது. மேலும், பிரபலங்களின் மற்றொரு பக்கத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்கள் காண முடியும்" என்றார்.
சோனி நிறுவனம் தனது புதிய தமிழ் சேனலான 'சோனி விழா'வை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சேனலின் முதல் பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 'மாஸ்டர் செப்' சமையல் போட்டி நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில் சமந்தா தொகுப்பாளராக பங்கேற்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
