சவுதி அரேபியா மீது தீவிரப்படுத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஆதரவு நாடான ஈரானுக்கு பாகிஸ்தான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிராந்திய நெருக்கடிகள் தீவிரமடைவதைத் தடுக்கும் ஒருங்கிணைந்த முயற்சியாக சவுதி அரேபியாவின் இந்த எச்சரிக்கைச் செய்தியை பாகிஸ்தான் ஈரானிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளதாக சவுதி, பாகிஸ்தான் மற்றும் ஈரான் இராஜதந்திர வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சவுதி அரேபியாவின் கமிஸ் முஷைத் (Khamis Mushait) பகுதியிலுள்ள விமானப் படைத்தளம் மற்றும் அருகிலுள்ள நகரங்களின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது ஹூதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 73 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, யேமனின் பல்வேறு மாகாணங்களிலுள்ள ஹூதிகளின் இலக்குகள் மீது சவுதி போர் விமானங்கள் கடந்த 12 மணித்தியாலங்களில் 54 வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் நிலவுவதால் பாகிஸ்தானின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சவுதி அரேபியா மீது முன்னெடுக்கப்படும் தேவையற்ற ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்களின் பரவல், ரியாத், அங்காரா மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகள் எவ்வித இராணுவ நடவடிக்கைகளும் சவுதி அரேபியாவின் எல்லைப் பாதுகாப்பிற்கு மட்டுமே உட்பட்டதாக இருக்கும் எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போதைய நிலையில் நிலைமையைச் சுமுகமாக்க இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் அதேவேளை, ஹூதிகளைக் கட்டுப்படுத்தத் தவறினால் இப்பிராந்தியப் போர் பாரிய பாதுகாப்பு நெருக்கடியாக உருவெடுக்கும் என தெஹ்ரானுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
