மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆற்றில் மாயமான 100-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காங்கோவில் சாலை வசதிகளை விட ஆறுகள் வழியாக படகு போக்குவரத்து அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால், அடிக்கடி படகு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், கசாய் மாகாணத்தில் உள்ள ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் பள்ளி மாணவர்களும் பயணம் செய்திருந்தனர்.
ஆற்றின் நடுப்பகுதியை அடைந்தபோது, படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆற்றில் மாயமான 100-க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
