அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், மனிதர்களின் தலைமுடியால் உருவாக்கப்பட்ட மாபெரும் கோளம் ஒன்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 'தி டம்பிள்ஹேர்' (The Tumblehair) என்று பெயரிடப்பட்ட இந்த உருண்டை, 10 அடி (3 மீட்டர்) உயரமும், 150 பவுண்டு (68 கிலோ) எடையும் கொண்டதாகும்.
மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட மன்ஹட்டன் நகரில் இந்த அரிய கோளம் காட்சிப்படுத்தப்பட்டது. இது CAD Industries மற்றும் Decimated Designs நிறுவனங்களின் ஒப்பனை பொருள் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், k18 கூந்தல் பராமரிப்பு நிறுவனம் மற்றும் அன்காமன் கிரியேட்டிவ் ஸ்டுடியோவிற்காக இந்த கோளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்டமான கோளம், இளவேனிற்காலத்தில் மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு தவிர்க்கமுடியாத முடி கொட்டுதலுக்கான உருவகமாக காட்சிப்படுத்தப்பட்டது. இதனை உருவாக்க, நியூயார்க் நகரில் உள்ள உள்ளூர் சலூன்களில் இருந்து பெறப்பட்ட மனிதர்களின் உண்மையான தலைமுடி மற்றும் செயற்கையான இழைகளின் கலவையைப் பயன்படுத்தி, கையால் தைத்து உருவாக்கியுள்ளனர்.
இந்த பாரம்பரியமற்ற கலைப்பொருளை, ஒப்பனை நிறுவன ஊழியர்கள் நியூயார்க் நகரின் சாலைகள், பூங்காக்கள் மற்றும் தெருக்களில் வழியாக கொண்டு சென்று மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்த சந்தை காட்சிப்படுத்தும் நிகழ்வானது மன்ஹட்டன் நகரில் தொடங்கி, மீட்பேக்கிங் (Meatpacking) மாவட்டத்தில் நிறைவு பெற்றது.
சிகை அலங்கார ஒப்பனை கலைஞர்களின் இந்த வித்தியாசமான சந்தைப்படுத்தும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பையும், பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. முடி உதிர்வு ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், அதனை இவ்வாறு ஒரு கலை வடிவமாக மக்கள் முன் கொண்டு சென்றது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
