இந்தியா-ஜப்பான் இடையேயான 16வது வருடாந்திர உச்சி மாநாடு டெல்லியில் இன்று முதல் ஜூலை 3 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி, மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை டெல்லி வந்தடைய உள்ளார்.
கடந்த 15வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு 2025 ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், தற்போது நடைபெறும் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜப்பான் பிரதமர் டகாயிச்சி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
மேலும் குறைக்கடத்திகள், முக்கிய கனிம வளங்கள் மற்றும் விநியோக சங்கிலி பாதுகாப்பு போன்ற துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-ஜப்பான் உறவில் பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பும் முக்கிய இடம் பெறுகிறது. குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், பாதுகாப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளுக்கான கட்டமைப்பு வளர்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவை பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
ஜப்பான் பிரதமர் டகாயிச்சி முன்வைத்து வரும் ‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்’ கொள்கையில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் நடைபெறுகிறது என்றும், பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு மற்றும் புதுமை சார்ந்த வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாடு, இந்தியா-ஜப்பான் இடையேயான நீண்டகால நட்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் முக்கிய கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
