தஞ்சை மாவட்டம் வெண்டயம்பட்டி கிராமத்தில் மாயமான பிளஸ்-2 மாணவி வயலில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெண்டயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் மகேஸ்வரி (17) அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென வீட்டிலிருந்து மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது தாய் சீதாலட்சுமி பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், வெண்டயம்பட்டி பகுதியில் உள்ள வயல் கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்கள் இணைந்து கிணற்றிலிருந்து உடலை மீட்டனர். உடல் அடையாளம் காணும் பணிக்காக மாணவியின் பெற்றோர் அழைக்கப்பட்டனர். பின்னர் மீட்கப்பட்ட சடலம் மகேஸ்வரியுடையதே என உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணத்துக்கான உண்மை காரணம் இன்னும் உறுதியாகவில்லை.
