பிலிப்பைன்ஸின் தென் பிராந்திய கடற்பரப்பில் பயணிகள் படகொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த போது படகில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், தீ பரவியதைத் தொடர்ந்து பலர் கடலில் குதித்து உயிர்தப்ப முயன்றதாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவுடன் பிலிப்பைன்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடலில் தத்தளித்த பெருமளவான பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
படகின் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படும் போதிலும், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
