உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய மின்னஞ்சல் சேவையாக Gmail உள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்து துறைகளிலும் ஜிமெயில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள நிலையில், தற்போது பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், ஜிமெயில் பயனர்கள் தங்களது கணக்கு செட்டிங்க்ஸை உடனடியாக சரிபார்க்க வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்யவில்லை என்றால், பயனர்களின் ஜிமெயில் கணக்குகள் மற்றும் மின்னஞ்சல்கள் செயற்கை நுண்ணறிவு (AI) சோதனை மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளவில் பல ஜிமெயில் கணக்குகளில், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுக்காக பயனர் தரவுகளை பயன்படுத்த அனுமதிக்கும் ‘Smart Features’ என்ற அமைப்பு தானாகவே ஆன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த அனுமதியை பயனர்கள் தாங்களாகவே (manual) மாற்றினால் மட்டுமே முடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை மாற்ற, ஜிமெயில் செயலிக்குள் சென்று “See all settings” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் “Smart Features” என்ற பகுதியில் சென்று, Gmail, Chat மற்றும் Google Meet ஆகியவற்றில் உள்ள “Turn on smart features in Gmail” என்ற ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். இதன் மூலம், பயனர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் கணக்கு விவரங்கள் AI பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்படுவதை தவிர்க்க முடியும்.
மேற்கண்ட செட்டிங்க்ஸை சரியாக மாற்றி அமைத்தால், உங்கள் ஜிமெயில் கணக்கும் மெயில்களும் தேவையற்ற செயற்கை நுண்ணறிவு சோதனைகளில் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அனைத்து ஜிமெயில் பயனர்களும் இந்த அமைப்புகளை ஒருமுறை கண்டிப்பாக சரிபார்த்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

