இன்றைய காலத்தில் ஸ்மார்ட் டிவிகள் வீடுகளின் அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டன. கேபிள் அல்லது டிடிஎச் இணைப்புகளுக்கு பதிலாக, இணையத்தின் மூலம் திரைப்படங்கள், தொடர்கள், யூடியூப் மற்றும் ஓடிடி தளங்களை நேரடியாக பார்க்கும் வசதி ஸ்மார்ட் டிவிகளை மிகவும் பிரபலமாக்கியுள்ளது. ஆனால், இந்த வசதிகளுடன் சேர்ந்து ஒரு மறைமுக அபாயமும் உள்ளது. அதாவது, ஸ்மார்ட் டிவிகளும் ஹேக்கிங் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு.
லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் போலவே, ஸ்மார்ட் டிவியும் இணையத்துடன் எப்போதும் இணைந்திருப்பதால், தீம்பொருள்கள் மற்றும் ஹேக்கர்கள் குறிவைக்கும் சாதனமாக மாறியுள்ளது. டிவியின் பெரிய திரைக்குப் பின்னால் ஒரு கணினி அமைப்பே செயல்படுகிறது. அதில் இயங்கும் மென்பொருள், இணைய இணைப்பு, கேமரா, மைக்ரோஃபோன், புளூடூத் போன்ற அம்சங்கள் தவறான கைகளில் சிக்கினால், தனியுரிமைக்கு ஆபத்து ஏற்படலாம்.
உங்கள் ஸ்மார்ட் டிவியில் திடீரென செயல்திறன் குறைவு, அடிக்கடி ஹேங் ஆகுதல், தெரியாத பாப்-அப் விளம்பரங்கள் தோன்றுதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால், அது ஹேக்கிங் அல்லது வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக இருக்கலாம். அதேபோல், நீங்கள் பதிவிறக்கம் செய்யாத அறிமுகமில்லாத ஆப்ஸ்கள் டிவியில் தோன்றினால் அல்லது முகப்புத் திரையில் விசித்திரமான பெயர்கள், மாற்றப்பட்ட ஐகான்கள் காணப்பட்டால், அது தீம்பொருள் ஊடுருவியதற்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.
மேலும், சமீபத்திய மென்பொருள் அப்டேட்களும் போதுமான ஸ்டோரேஜும் இருந்தபோதும், டிவி அடிக்கடி தானாக ஆன், ஆஃப் ஆகுவது அல்லது முற்றிலும் செயலிழப்பது போன்ற நிலை ஏற்பட்டால், வைரஸ் அல்லது ஹேக்கிங் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதை சாதாரண தொழில்நுட்ப கோளாறு என அலட்சியப்படுத்தாமல் கவனமாக அணுக வேண்டும்.
ஸ்மார்ட் டிவியை பாதுகாப்பாக பயன்படுத்த சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். டிவியின் செட்டிங்ஸில் உள்ள பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களை இயக்கி வைத்திருப்பது முக்கியம். தேவையற்ற அனுமதிகளை ஆப்ஸ்களுக்கு வழங்காமல் இருப்பதும் பாதுகாப்பை அதிகரிக்கும். மேலும், டிவிக்கு ஏற்ற வைரஸ் தடுப்பு செயலிகளை பயன்படுத்தி அவ்வப்போது ஸ்கேன் செய்வதன் மூலம் தீம்பொருள் தாக்குதல்களை தவிர்க்க முடியும்.
ஸ்மார்ட் டிவி வசதியானதோடு பாதுகாப்பும் முக்கியம். சிறிய கவனக்குறைவு கூட பெரிய பிரச்சனையாக மாறக்கூடிய இந்த காலத்தில், சில எளிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உங்கள் டிவியையும், உங்கள் தனியுரிமையையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

