அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை 110 நாட்களுக்கு மேலாக நீடித்ததாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஒன்று உருவானது. மேலும் 60 நாட்களுக்குள் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த இரு தரப்பும் முயற்சி மேற்கொண்டு வந்தன.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் காரணமாக மீண்டும் பதற்றம் அதிகரித்தது. ஈரான் கடல் எல்லை மீறல் காரணமாக டிரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டால் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக நிறுத்திவிடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், ஈரான் தரப்பில் சந்திப்புக்கான கோரிக்கை வந்துள்ளதாகவும், அந்த சந்திப்பு கத்தாரின் தோஹாவில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை குறைப்பதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
