தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் நடந்த பரிதாபகரமான விபத்தில், 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக்கப் வாகனம் துறவிகள் குழுவின் மீது மோதியதில் 9 துறவிகள் உயிரிழந்தனர்.
Mukdahan மாகாணத்தில் நடந்த இந்த சம்பவத்தில், புனித பயணமாக நடந்து சென்ற சுமார் 35 துறவிகள் கொண்ட குழு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே 5 துறவிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், துறவிகள் Ubon Ratchathani நோக்கி சுமார் 260 கி.மீ. நடைபயணத்தை தொடங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடக் கண்காணிப்பு காட்சிகளில், டிரக் துறவிகள் மீது மோதும் முன் அவர்கள் சாலையோரமாக வரிசையாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டியது 11 வயது சிறுவன் எனவும், தற்போது அவன் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், வாகனம் குடும்பத்தின் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி துறவிகள் மீது மோதியிருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
