இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஏற்கனவே 4 போட்டிகளில் இந்தியா 3 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா முறையே 6 மற்றும் 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் குறைந்த ரன்களில் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இணைந்த இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சூரியகுமார் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், மறுபுறம் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார். அவர் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்து வேகமான பங்களிப்பை வழங்கினார்.
இதன் முடிவில், 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
