மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவத்துக்கும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் பமாகோ மற்றும் வடக்கு பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
மாலியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவத் தலைவர் அசிமி கோய்டா நாட்டின் தலைவராக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். இந்த சூழலில், ரஷியாவின் ஆதரவுடன் மாலி ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிகாதி ஆயுதக் குழுக்கள் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பமாகோ உள்ளிட்ட பல நகரங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு சவால் மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது பமாகோவில் மாலி ராணுவம் மற்றும் ரஷிய ஆதரவு பாதுகாப்புப் படைகளை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வடக்கு மாலியின் அக்லிஹல், அனிபிஸ், கொவா மற்றும் ஹனிரொபா உள்ளிட்ட பகுதிகளிலும் மோதல்கள் நீடித்து வருகின்றன.
வடக்கு மாலியை தனி அரசாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து செயல்படும் சில கிளர்ச்சிக் குழுக்கள், அரசுப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த மோதல்களை கட்டுப்படுத்த மாலி ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டின் நிலைமையை சர்வதேச நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
